ரெயில்வே கேட்டில் டிராக்டர் மோதல்; வைக்கோல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


ரெயில்வே கேட்டில் டிராக்டர் மோதல்; வைக்கோல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரெயில்வே கேட்டில் டிராக்டர் மோதி வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. நடுவழியில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாவன் மகன் சிவபூஷன். இவர், இன்று காலை தனது டிராக்டர் டிப்பரில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை நோக்கி புறப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையாம்பட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு காலை 9.15 மணிக்கு டிராக்டர் வந்தது. அதே சமயம் திருச்சியி்ல் இருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

ரெயில்வே கேட் மீது மோதல்

எனவே கேட் கீப்பர், ரெயில்வே கேட்டை மூடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த சிவபூஷன், கேட்டை மூடுவதற்குள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று நினைத்து டிராக்டரை வேகமாக ஓட்டி வந்தார்.

அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக ரெயில்வே கேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரெயில்வே கேட் சேதமடைந்து, ரெயில் என்ஜினுக்கு மின் வினியோகம் செய்யும் உயரழுத்த மின்கம்பி மீது உரசியது.

சிக்னல் பழுது

இதனால் தீப்பொறி ஏற்பட்டு, வைக்கோல் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சிவபூஷன், டிராக்டரை சற்று தொலைவில் சென்று நிறுத்தினார். பின்னர் டிப்பரில் இருந்த வைக்கோலை கீழே தள்ளி விட்டு தனியாக ஓட்டிச்சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். டிராக்டர் மோதியதில் ரெயில்வே கேட் சேதமடைந்ததால் சிக்னல் பழுதானது. இதனிடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரெயில்கள் தாமதம்

இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரெயில்வே கேட் மற்றும் உயர் அழுத்த கம்பியை சரி செய்தனர்.

இந்த விபத்தினால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக சென்றன.

இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story