திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் டிப்பர் திருட்டுஉயர் அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை


தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் டிப்பர் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் போலீசார், அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, டிராக்டர்கள், மாட்டுவண்டிகள், லாரிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி, இளந்துறை கிராமத்தை சேர்ந்த இயேசுஅடியான் மகன் அருள் (வயது 53) என்பவரின் டிராக்டர் டிப்பர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

டிராக்டர் டிப்பரை காணவில்லை

இந்த நிலையில், கடந்த 21-ந்தேதி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டர், டிப்பர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்த்து வருவதற்காக அருள் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது டிராக்டர் மட்டுமே அங்கு நின்றது. அதனுடன் இருந்த டிப்பரை காணவில்லை.

இது தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் இது தொடர்பாக புகார் ஒன்றையும் போலீஸ் நிலையத்தில் கொடுத்து உள்ளார்.

ஆனால், அதை போலீசார் வாங்காமல், 2 நாட்கள் காத்திருங்கள் என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அருள் தற்போது உள்ளார்.

விசாரணை தேவை

இதுகுறித்து வாகன உரிமையாளர் அருள் கூறுகையில், எனது டிராக்டர் டிப்பருடன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அங்கு டிப்பரை மட்டும் காணவில்லை. டிப்பரை யாருக்கோ விற்பனை செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இதேபோன்று பலரது மாட்டுவண்டிகளும் காணாமல் போய் உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறையில் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த டிராக்டர் டிப்பர் திருடு போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டதா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். எனவே இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மையில் டிராக்டர் டிப்பர் திருடு போனதா? அ ல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story