தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

குழந்தைகள் வளர்ச்சியில், கர்ப்பிணிகளை பாதுகாப்பதில் பங்களிப்பு செய்துவருவது அங்கன்வாடி மையங்கள். இதனை ஒன்றுடன் ஒன்று இணைத்து எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, தமிழக அரசு அங்கன்வாடி மையங்களை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சின்னதுரை எம்.எல்.ஏ. பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சின்னப்பா பூங்காவை வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சின்னதுரை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்தி குழந்தைகளை மையங்களுக்கு வரவழைப்பதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை சிதைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள சூழலில் தமிழக அரசும் அதற்கு இறையாகாமல், அங்கன்வாடி மையங்களையும், அதன் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும், என்றார்.


Next Story