மாடுகள் வரத்து குறைவால் வியாபாரிகள் ஏமாற்றம்
பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை அடுத்த சத்தியமங்கலத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகின்றது. இந்தச் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் உயர் ரக கறவை மாடுகள் மற்றும் நாட்டு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறு கொண்டு வரப்படும் கறவை மாடுகளை சேலம், சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகள் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் வாரத்திற்கு சுமார் 2 கோடிக்கு மேல் வர்த்தகம். நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த நான்கு வார காலமாகவே வாரச்சந்தையில் குறைந்த அளவிலேயே மாடுகள் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடியது. அதிகாலையிலேயே கறவை மாடுகள் வரத்து மந்தமாகவே காணப்பட்டது. காலை 8 மணி நிலவரப்படி சுமார் 300 கறவை மாடுகளே விற்பனைக்காக வந்திருந்தன. இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் பொய்கை வாரச்சந்தை வியாபாரம் பிசுபிசுத்துபோனது. வியாபாரிகள் கறவை மாடுகளை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனால் இந்த வாரம் சுமார் ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரைதாள் வர்த்தகம் நடந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.