நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் ரூ.85 கோடி செலவில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலைய கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், அதனை விரைந்து நிறைவேற்றி மீண்டும் திறக்க வலியுறுத்தி, மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன், தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நெல்லை சந்திப்பு பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆணையாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாநகராட்சி மேயர், ஆணையாளர் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணின் தரம் குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகராட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் விரைவில் உத்தரவு கிடைக்க உள்ளது. கோர்ட்டு மணலை அகற்ற உத்தரவிட்டால், கோர்ட்டு வழிகாட்டுதலை பின்பற்றி 2 நாட்களில் அந்த மணலை அகற்றி, குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு, பஸ் நிலைய கட்டுமானத்தில் மீதமுள்ள பணிகளை முடித்து, வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதி பொங்கலுக்குள் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story