கடைகளுக்கு வாடகை உயர்த்தியதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
திட்டுவிளையில் கடைகளுக்கு வாடகை உயர்த்தியதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அழகியபாண்டியபுரம்:
திட்டுவிளையில் கடைகளுக்கு வாடகை உயர்த்தியதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாடகை உயர்வு
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் திட்டுவிளை பகுதியில் உள்ளது. இங்குள்ள கடைகளுக்கு டெண்டர் விட்டு வாடகை உயர்வு விதிப்பதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை கண்டித்து நேற்று காலையில் பொது வணிக வளாகத்தில் மீன் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் திட்டுவிளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டுவிளை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் திருமாவேந்தன் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கைது
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் திட்டுவிளையில் பரபரப்பு ஏற்பட்டது.