சேலம் போஸ் மைதானத்தில் பூக்கடைகளை அகற்ற எதிர்ப்பு-அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


சேலம் போஸ் மைதானத்தில் பூக்கடைகளை அகற்ற எதிர்ப்பு-அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
x

சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பூக்கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

பூ மார்க்கெட்

சேலம் கடைவீதி பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தில் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பூ மார்க்கெட் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனால் அங்கு இயங்கி வந்த பூ மார்க்கெட் தற்காலிகமாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

மேலும் அங்கு பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டது. இதனால் மீண்டும் பூ மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வாக்குவாதம்

இந்த நிலையில் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். இதையொட்டி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த பூக்கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்தனர். மேலும் அங்கிருந்த கடைகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் ஊழியர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் முன் பகுதியில் இருந்த கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பூ வியாபாரிகளிடம் பேசிய அதிகாரிகள், 'அனைத்து வசதிகளும் புதிய மார்க்கெட்டில் உள்ளன. அதன் திறப்பு விழா முடிவடைந்தவுடன் முறையாக அனைத்து கடைகளும் அங்கு மாற்றப்படும். அதுவரைக்கும் தற்போது வணிக வளாகத்தில் கடைகளை வைத்து கொள்ளுங்கள்' என்றனர்.

இதனிடையே கடைகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பூ வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story