வணிக வரித்துறை அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை


வணிக வரித்துறை அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை
x

நெல்லையில் வணிக வரித்துறை அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று நெல்லை பாளையங்கோட்டை தெற்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் முன்பு திரண்டனர். அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

வணிக வரித்துறையால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், 'டெஸ்ட் பர்சேஸ்' எனப்படும் விற்பனை பரிசோதனை செய்வது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதே இதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அதிகாரிகள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது போல் செயல்பட்டு, அதை டெஸ்ட் பர்சேஸ் என குறிப்பிட்டு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அனைத்து சில்லறை கடைக்காரர்களும் தாங்கள் ஏற்கனவே பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரி செலுத்தி பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கிறார்கள். இது சில்லறை, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் ஆகும்.

வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், துறைமுக கன்டெய்னர்களில் கொண்டு வரப்படும் பொருட்களையும், அவற்றை கொண்டு வரும் நிறுவனங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும். எனவே வரி ஏய்ப்பில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும். சில்லறை, சிறு-குறு வணிகர்களை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த டெஸ்ட் பர்சேஸ் குறித்த நடைமுறை தொடர்பாக குறைந்தபட்சம் 6 மாத காலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு ரூ.5 கோடிக்கு மேல் விற்று-வரவு செய்கிற வணிகர்களிடம் மட்டுமே நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதில் சிறு, குறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதில் சங்க செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன், தெற்கு மாவட்ட தலைவர் சின்னதுரை, செயலாளர் ஆசாத், பொருளாளர் பி.சி.ராஜன், செய்தி தொடர்பாளர் பகவதி ராஜன், நிர்வாகி பெரிய பெருமாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story