பண்ருட்டியில் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி வணிகர்கள் ஊர்வலம் கோரிக்கை அட்டை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்
பண்ருட்டியில் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையை கைவிடக்கோரி வணிகர்கள் ஊர்வலமாக சென்றனா். மேலும் அவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி,
மத்திய அரசின் ஜி.எஸ்.டி, வணிகவரித்துறையின் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' போன்றவற்றால் சிறிய வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி வருகிற 24-ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட 4 கட்டமாக போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து இருந்தார்.
ஊர்வலம்
அந்த வகையில், முதற்கட்டமாக, பண்ருட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி நேற்று ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
பஸ்நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் கடலூர் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, டைவர்ஷன் சாலை, வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவு பெற்றது.
ஊர்வலத்தின் போது, அனைத்து வணிகர்களுக்கும் கோரிக்கை அட்டை (பேட்ச்) வழங்கப்பட்டது. அதை வணிகர்கள் அணிந்து கொண்டு, வியாபாரத்தில் ஈடுபட்டனர். வணிகர்கள் தங்களது சட்டையில் அணிந்திருந்த கோரிக்கை அட்டையில் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை ரத்து செய்ய வேண்டும் என்று எழுதப் பட்டிருந்தது.
24-ந்தேதி ஆர்ப்பாட்டம்
இதில் மாவட்ட செயலாளர் வீரப்பன், பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கத்தின் தொகுதி செயலாளர் சிவகுரு, துணைத்தலைவர் லட்சுமி நாகராஜ், எஸ்.வி. ஜூவல்லரி உரிமையாளர் அருள், சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் முருகதாஸ், தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி மற்றும் வணிகர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அடுத்தகட்டமாக, வருகிற 24-ந்தேதி காலை 10 மணியளவில் விருத்தாசலம் நகரில் மாவட்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மண்டல தலைவர் சண்முகம் தெரிவித்தார்.