வியாபாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
தர நிர்ணய சட்டவிதிகளை வியாபாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசுகையில், தர நிர்ணய சட்ட விதிகளை வியாபாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது. உணவு தரச்சான்று நிறுவன விதிகளை பின்பற்றி உரிமத்தை காலம் தவறாமல் புதுப்பிக்க வேண்டும். தவறினால் அபராதம் செலுத்த நேரிடும். விற்பனை செய்யும் பொருட்களில் காலாவதி தேதியின்மேல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் கடமை வியாபாரிகளுக்கு உள்ளது என்றார். இதில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.