விழுப்புரம் வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் வணிகர்கள் மனு
விழுப்புரம் வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என கலெக்டரிடம் வணிகர்கள் மனு அளித்தனா்.
விழுப்புரம் கே.ஆர்.பிளாசா வணிகர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் கே.ஆர். பிளாசா வணிக வளாகத்தில் 40 கடைகள் அமைந்துள்ளன. அதன் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் மது குடித்துவிட்டு வணிக வளாகத்திற்குள் வந்து வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது, காலி மதுபாட்டில்களை உடைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு இவர்கள் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துவிட்டது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுப்பிரியர்களின் அட்டகாசத்தினால் எங்கள் வணிக வளாகத்தில் உள்ள கடைக்கு பெண்கள் வருவதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் குடிபோதையில் அவர்கள் பேசும் அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். இதுபற்றி காவல்துறையிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே எங்களுடைய வணிகத்திற்கு பெரும் இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.