மாநகராட்சி வாகனத்துக்கு அடியில் படுத்து வியாபாரி போராட்டம்


மாநகராட்சி வாகனத்துக்கு அடியில் படுத்து வியாபாரி போராட்டம்
x

நாகர்கோவிலில் பழக்கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனத்துக்கு அடியில் படுத்தபடி வியாபாரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பழக்கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனத்துக்கு அடியில் படுத்தபடி வியாபாரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரி போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பார்வதிபுரம் பாலம் பகுதியில் பழக்கடை ஒன்று ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாநகராட்சியினர் நேற்று காலை அங்கு சென்று பழக்கடையை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் வியாபாரி சுதீர்தீன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் மாநகராட்சி ஊழியர்கள் கடையில் இருந்த பொருட்களை மாநகராட்சி டெம்போவில் ஏற்றினர்.

உடனே அந்த வியாபாரி சுதீர்தீன் மாநகராட்சி டெம்போ அடியில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகனத்தை ஊழியர்களால் எடுக்க முடியவில்லை.

அப்புறப்படுத்தப்பட்டார்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் உடன்படவில்லை.

இதனால் சுமார் 1 மணி நேரத்துக்குப்பிறகு டெம்போவின் அடியில் படுத்திருந்த வியாபாரியை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


Next Story