வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
ராஜபாளையம்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
நடவடிக்கை இல்லை
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ரெயில்வே மேம்பால பணி, தாமிரபரணி கூட்டு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கி தற்போது வரை சுமார் 70 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இதனால் அனைத்து தெருக்களும், சாலைகளும் 4 வருடங்களாக குண்டும் குழியுமாகவே காட்சியளித்து வருகிறது. புறவழிச்சாலை இல்லை என்பதால் மதுரை, தென்காசி, நெல்லை செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஒரே சாலையில் செல்வதால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மாதக் கணக்கில் சமப்படுத்தப்படாமல் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததுடன் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையடைப்பு
பணிகள் நிறைவடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், இதுவரை சாலையை சீரமைப்பதில் அலட்சியம் காட்டும் போக்கை கடைபிடித்து வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வணிகர்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டன.
பால், மருந்து உள்ளிட்டவை தவிர்த்து மற்ற கடைகள் நேற்று மூடப்பட்டன. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் சேதமான சாலைகளை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜபாளையம் நகர வணிகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் கடையடைப்புக்கு ஆதரவாகவும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்தியும் ஜவஹர் மைதானம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நற்பணி மன்ற நிர்வாகிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை விரைந்து சீரமைக்க கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.