கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் வியாபாரிகள் போராட்டம்


கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் வியாபாரிகள் போராட்டம்
x

ஊட்டியில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

கடைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் இருந்தன. இந்த நிலையில் நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களது கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த வாரம் பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் பெரும்பாலான கடைகளை அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இதுகுறித்து வனத்துறை அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் முறையிட்டனர்.

போராட்டம்

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இன்று சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தநிலையில் மீதமுள்ள கடைகளை நகராட்சி அலுவலர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை கண்டித்து சிறு வியாபாரிகள் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரிகள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தினர். மேலும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து வியாபாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. அதன் பின்னர் முறையாக டெண்டர் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும். அப்போது இங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றனர்.


Next Story