கோவில்பட்டியில் வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்; 70 பேர் கைது


கோவில்பட்டியில் வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்; 70 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டங்குளம் காய்கறி சந்தைக்கு அனுமதி வழங்கக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன் வியாபாரிகள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு ரூ.6.87 கோடி செலவில் 251 புதிய கடைகள் கட்டும் பணி கடந்த 17-ந்தேதி தொடங்கப்பட்டது.

புதிய கடைகள் கட்டும் பணி

இதற்கு மாற்று ஏற்பாடாக கூடுதல் பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இடங்களை பார்வையிட்டு ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் வியாபாரிகள் கூடுதல் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் இல்லை என்றும், நகரில் வேறு இடத்தில் தினசரி சந்தை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் வியாபாரிகள் தாங்கள் ஏற்கனவே திட்டங்குளம் கிராமத்தில் சங்கம் மூலம் வாங்கிய 10 ஏக்கர் நிலத்தில் முதல்கட்டமாக 20 மொத்த கடைகள், 20 சில்லறை விற்பனை கடைகள் என 40 தற்காலிக கடைகள் அமைத்து கடந்த 17-ந்தேதி காய்கறி விற்பனையை தொடங்கினர்.

வியாபாரம் நிறுத்தம்

இந்த சந்தை முறையான அனுமதி பெற்று தொடங்கப்படவில்லை என்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார் அறிவித்ததின் பேரில் வியாபாரிகள் கடந்த 24-ந்தேதியுடன் அங்கு வியாபாரத்தை நிறுத்தினர்.

இதனால் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து மொத்தமாக வியாபாரிகளிடம் கொடுத்து பணம் பெற்று செல்வது தடைப்பட்டது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், விளைபொருட்களை அரசு வாங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்லத்துரை, வியாபாரிகள் சங்க தலைவர் அழகுராஜன், பொருளாளர் சின்ன மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வக்கீல் ரவிக்குமார், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனிநாடார், தமிழ்நாடு காமராஜ் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், ஜெய்பீம் மாவட்ட தலைவர் தாவீதுராஜா, பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி, தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரி ஷீலா, மருதம் முன்னேற்றக் கழக தலைவர் அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

70 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சுசிலா, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். திட்டங்குளம் சந்தை பிரச்சினை தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு போராட்டக்காரர்கள், திட்டங்குளம் சந்தைக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்க வேண்டும். அவர் நேரில் வந்து பேசினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story