அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல்
மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சி பள்ளிப்பாளையத்தில் அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சி பள்ளிப்பாளையத்தில் அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்கள்
திருப்பூர் மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சி பள்ளிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்களாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பூமலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
சாலை மறியல்
பெரும்பாலும் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக சென்று படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்கள் காலை மற்றும் மாலையில் பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் விடும் நேரத்திற்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பள்ளிப்பாளையத்திற்கு அரசு பஸ்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை எனக்கூறி மாணவ-மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பள்ளிப்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள மங்கலம் செல்லும் சாலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் மங்கலம் போலீசாரிடம் "கருமத்தம்பட்டி அரசு பஸ் டெப்போ உயர் அதிகாரி வரும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம்" என தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், கருமத்தம்பட்டி பஸ் டெப்போ உயர் அதிகாரி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் "இனி அரசு பஸ்கள் உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்ததைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பள்ளிப்பாளையம்-மங்கலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.