சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் ஆவின் நிறுவனம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இந்த பள்ளத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. அந்த லாரி ஆவின் நிறுவனம் அருகே வந்த போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரியை தொடர்ந்து டிரைவரால் இயக்க முடியவில்லை. லாரியை ஓட்டிவந்த டிரைவர் வீரசிங்கம் (வயது 50) உடனடியாக லாரியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த எம்.சாண்ட் மணலை மாற்று லாரியில் ஊழியர்கள் ஏற்றினர். அதன்பின் பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்தது. மேலும் விபத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்படைந்தது.