போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
காவேரிப்பட்டணத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகவும், சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி சாலை, பனகல் தெரு மற்றும் அகரம் சாலை நான்கும் சந்திக்கும் முக்கிய இடமாக பிள்ளையார் கோவில் நான்குரோடு அமைந்துள்ளது. இந்த சாலைகளில் துணிக்கடைகள், நகைக்கடைகள், மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.
மேலும் சுற்றியுள்ள கிராம பொது மக்கள் நகருக்குள் இச்சாலைகளின் வழியாக வந்து செல்கின்றனர். இந்த சாலைகளில் சரக்கு வேன், பால்வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், பள்ளி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தடுப்புகள் அமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காவேரிப்பட்டணம் நகருக்குள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.