ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல்


ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல்
x

நெல்லிக்குப்பத்தில் ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நிகழும் முன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்

சாலையின் இருபுறமும் பள்ளங்கள்

கடலூர்-மடப்பட்டு இடையிலான 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு (கடலூர்-சித்தூர் சாலை) ஆசியா வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட அலகு திட்டத்தில் ரூ.231.77 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில் இருந்து வரசித்தி விநாயகர் கோவில் வரை இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அதில் எந்தவித எச்சரிக்கை பலகையும், பாதுகாப்பு உபகரணங்களும் வைக்காமல் பணி நடக்கிறது.

அச்சத்தில் பயணிகள்

ஒரே நேரத்தில் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் சாலையும் குறுகி போய் உள்ளது. இதனால் எதிரே வரும் கனரக வாகனத்துக்கு வழிவிடும்போது மழைநீர் வடிகால் வாய்க்காலை ஒட்டியபடி வாகனங்கள் செல்கின்றன. அளவுக்கு அதகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களில் வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது, பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் நெல்லிக்குப்பம்-கடலூர் சாலையில் நேற்று காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் வாகனமும் ஒன்று சிக்கி தவித்தது.

இது குறித்து நெல்லிக்குப்பம் நகர மக்கள் கூறுகையில், இந்த சாலையையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி முடியும் வரை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் எனவும், மாற்று வழியில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் விபத்து நிகழும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story