சாலை சீரமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்
அய்யம்பாளையம் பிரிவு சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது.
சாலை சீரமைப்பு பணி
கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம் பிரிவு சாலை யிலிருந்து தார் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அய்யம்பாளையம் பிரிவு சாலை வழியாக சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாலத்துறை வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகள் எனஅனைத்து வாகனங்களும் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் தர்மபுரி, பெங்களூரு, சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் திருச்செங்கோடு பகுதியில் இருந்து கரூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அதே சாலையில் ஒரு வழி பாதையில் எதிர் திசையில் செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எதிர் எதிர் திசையில் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
இருவழிச் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒரே சாலையில் சென்று கொண்டிருக்கிறது.இதனால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், வேன்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் போய் சேர வேண்டிய இடத்திற்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மணிக்கணக்கில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகனங்களை தனியார் பொறியியல் கல்லூரி அருகே தளவாபாளையம் வழியாக செல்லும் சாலையில் செல்ல நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.