வாகனங்களால் போக்குவரத்து இடையூறு
சிவகாசி காமராஜர் சிலை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
சிவகாசி,
சிவகாசி காமராஜர் சிலை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
காமராஜர் சிலை
சிவகாசி நகரின் மையப்பகுதியில் பழைய நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் 4 ரோடு சந்திப்பில் காமராஜர் சிலை உள்ளது. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், தபால் அலுவலகம், அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட், பத்திரப்பதிவு அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அந்தந்த அலுவலகத்தின் வாசலில் தான் நிறத்தப்படுகிறது. இவ்வாறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் எதிர் திசைக்கு செல்ல பெரிதும் சிரமப்படுகிறது.
தடை விதிக்கப்படுமா?
இப்படி போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த சாலையில் தற்போது அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து அந்த சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியை கடந்த செல்ல மற்ற வாகனங்கள் பெரும் சிரமப்படுகிறது. அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் இரண்டு புறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்துக்கு பெரும் பாதிப்புள்ள இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.