மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பந்தலூர்-கோழிக்கோடு சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், கரியசோலை, நெலாக்கோட்டை, அய்யன்கொல்லி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாய்கள் மற்றும் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்தன. இதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பந்தலூரில் இருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலை சோலாடியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ்கள் உள்பட தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.