சாலையை சூழ்ந்த வெள்ளம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு...!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
சென்னை,
சென்னையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று முற்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின் வடதமிழகம் - தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.
மிக்ஜம் புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் துரைப்பாக்கம் - பல்லாவரம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.