கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மாற்றம்


கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெரிசலை தவிர்க்க நாளைமறுநாள் முதல் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோரை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கலெக்டர் ஷ்ரவன் குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஏமப்பேர் புறவழிச்சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் பாதையில் மாற்றம் செய்யப்பட்டு நேராக சென்னை புறவழிச் சாலையில் சென்று சாமியார்மடம் வழியாக இடது புறம் வளைந்து ஏ.கே.டி. பள்ளி சாலை வழியாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் சேலம் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லக் கூடிய அனைத்து பஸ்களும் நான்கு முனை சந்திப்பை கடந்து அண்ணா நகர், ஏமப்பேர் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் அனைத்தும் வழக்கமான பாதையிலேயே செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆகியோர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story