சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்


சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
x

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியால் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம்

மேம்பால பணிகள்

சேலம்- விருத்தாசலம் ரெயில் வழித்தடத்தில் சேலம் டவுன் முள்ளுவாடி கேட் பகுதியில் 2 இடத்தில் ரெயில்வே கேட் பாதைகள் உள்ளன. இங்குள்ள செரி ரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் பிரட்ஸ் ரோட்டில் வாகனங்கள் சென்று வருவதை காணமுடிகிறது. இதன் காரணமாக ரெயில் செல்லும்போது முள்ளுவாடி கேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

வாகன ஓட்டிகள் அவதி

இந்நிலையில், ரெயில்வே பாதை பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 9 மணியளவில் முள்ளுவாடி கேட் பிரட்ஸ் ரோடு வழிப்பாதை அடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளம் பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து டவுன் பகுதிக்கு வர முடியாமலும், டவுன் பகுதியில் இருந்து அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சிக்கு செல்ல முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். அதாவது, அஸ்தம்பட்டியில் இருந்து வந்த வாகனங்கள் தொங்கும் பூங்கா, ரோட்டரி ஹால், தமிழ்ச்சங்கம் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

அதேசமயம், டவுன் பகுதியில் இருந்து கோரிமேடு, கன்னங்குறிச்சி பகுதிக்கு சென்ற பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள், மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனால் கலெக்டர் அலுவலகம், மேம்பாலம், தொங்கும் பூங்கா பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த ரெயில்வே பராமரிப்பு பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு பிரட்ஸ் ரோடு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இனிவரும் நாட்களில் இதுபோன்று தண்டவாளம் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றால், இரவு நேரங்களில் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் ஆலோசிக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story