அண்ணா பஸ்நிலையம் அருகே போக்குவரத்து மாற்றம் - ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை


அண்ணா பஸ்நிலையம் அருகே போக்குவரத்து மாற்றம் - ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை
x

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை


மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை நகரில் நாள்தோறும் பெருகி வரும் வாகன பெருக்கத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக மதுரை மதிச்சியம் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவின் நான்கு ரோடு சந்திப்பு முதல் வள்ளுவர் சிலை வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை மிகவும் முக்கியமாக இருக்கிறது.

இந்த சாலை வழியாகதான் வெளிமாவட்டங்களிலிருந்து ஆம்புலன்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் சாலையாகவும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது. மேலும் வெளிமாவட்டத்திலிருந்து மதுரை நகருக்குள் செல்லக்கூடிய அணுகுசாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஆவின் சந்திப்பிலிருந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வள்ளுவர் சிலை சந்திப்பு வரை அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன நெரிசல்

இதுதவிர மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வந்து செல்வதால் வள்ளுவர் சிலை சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வள்ளுவர் சிலை சந்திப்பிலிருந்து ஆவின் ரோடு செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த இடத்தில் சாலை அமைப்பு போக்குவரத்து சிக்னல் அமைக்க இயலாத வண்ணம் உள்ளது. எனவே இந்த சந்திப்பில் போக்குவரத்தினை கையாள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

12-ந் தேதி முதல்....

இதனை தவிர்க்கும் வண்ணம் வருகிற 12-ந் தேதி முதல் சோதனை ஓட்டமாக கீழ்கண்ட பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

தற்போது இருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆவின் சந்திப்பிலிருந்து வள்ளுவர் சிலை சந்திப்பு வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இச்சாலையில் வள்ளுவர் சிலை சந்திப்பிலிருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆனால் ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

கே.கே.நகர் மற்றும் மேலமடையிலிருந்து ஆவின் வழியாக வள்ளுவர் சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குருவிக்காரன் 2- வது சாலை காந்தி வீதி, வள்ளுவர்சிலை சந்திப்பு வழியாக பனகல் சாலை வழியாக அரசு ஆஸ்பத்திரி பகுதிக்கு செல்லாம். எனவே குருவிக்காரன்சாலை 2-வது சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. காந்தி வீதியிலிருந்து குருவிக்காரன்சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

பஸ் போக்குவரத்தில் மாற்றம்

இதுதவிர கே.கே.நகர் மற்றும் மேலமடையிலிருந்து ஆவின் சந்திப்பு வழியாக பனகல்ரோடு செல்லக்கூடிய அரசு பஸ்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு சந்திப்பு வழியாக சுப்புராமன் தெருவில் இடதுபுறம் திரும்பி வடக்குத்தெரு வழியாக பனகல் சாலைக்கு செல்ல வேண்டும். இச்சாலையும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

வள்ளுவர்சிலை சந்திப்பில் உள்ள கோரிப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்களின் பஸ் நிறுத்தம் அகற்றப்படுகிறது.

இந்த போக்குவரத்து மாற்றங்களால் தற்சமயம் பயன்படுத்தப்படாமல் உள்ள அண்ணா பஸ் நிலையம் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வருவதோடு, போக்குவரத்து நெரிசல் குறையும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story