காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு


காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
x

தவுட்டுப்பாளையம் அருகே காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கரூர்

காற்றாலை விசிறி இறக்கை

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு 360 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கைகளை 5-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் கொண்டு சென்றனர். இந்த லாரிகள் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே நேற்று பகல் 12.30 மணியளவில் வந்தபோது லாரிகள் திரும்ப முடியாமல் நீண்ட நேரம் நின்றன. இதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக வளைந்து நெளிந்து ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், காற்றாலை இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story