போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
x

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ேராடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ரோட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அடிக்கடி நெருக்கடி

பனியன் தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூர் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் திருப்பூர் மாநகரில் உள்ள ரோடுகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன்காரணமாக அவ்வப்போது முக்கியமான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள நால் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இங்கு சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சள் நிற விளக்கு மட்டும் தொடர்ச்சியாக எரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவரவர் விருப்பத்திற்கு செல்கின்றனர். சில நேரங்களில் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர். ஆனாலும், மஞ்சள் விளக்கு எரிந்தவண்ணம் இருப்பதால் தூரத்தில் வரும் வாகன ஓட்டிகள் போலீசாரை கவனிக்காமல், சிக்னல் விளக்கை கவனித்தபடி வருவதால் நால் ரோட்டில் நிற்காமல் வேகமாக கடந்து செல்கின்றனர். இவ்வாறு நான்கு ரோடுகளிலும் இருந்து வாகனங்கள் ஒரே நேரத்தில் அங்குமிங்குமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விபத்து அபாயம்

இந்த ரோட்டின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பல்லடம் ரோட்டில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரில் இருந்து பல்லடத்திற்கும் பொதுவான வாகனங்கள் மட்டுமின்றி, கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. இதேபோல், இந்த பகுதியில் தெற்கு உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட், வெங்காய மண்டி உள்ளிட்டவைகள் இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் மார்க்கெட்டில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் என எப்போதும் பரபரப்பான வாகனப்போக்குவரத்து இருந்தவண்ணம் உள்ளது. இதேபோல், திருப்பூரில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கும் இந்த வழியாக அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறு இந்த நால்ரோடு பகுதியில் அதிக வாகனங்கள் செல்லும் நிலையில், எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இங்கு மார்க்கெட் பரபரப்பாக இயங்கும் மதிய வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மதியம் இவ்வழியாக சென்ற திருப்பூர் மாவட்ட கலெக்டரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

ரோட்டில் நிற்கும் வாகனங்கள்

இதுஒருபுறமிருக்க, திருப்பூர் புதுமார்க்கெட் வீதி அருகே, சிக்கண்ண செட்டியார் வீதியில் மொத்த விற்பனை நடைபெறும் கடைகள் அதிகம் உள்ளன. இங்கு கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்காக லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன. இதேபோல், இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் அதிக அளவில் வருகின்றனர். இந்த வீதி ஏற்கனவே குறுகலாக உள்ள நிலையில் இங்கு ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடமின்றி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுவதால் இங்கு இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு கூட இடமிருப்பதில்லை. அதிகமான வாகனப்போக்குவரத்து உள்ள நேரங்களிலும் இங்கு ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த வீதியை தவிர்த்து பிற வீதி வழியாக செல்கின்றனர். எனவே, இங்கு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த செய்ய வேண்டும் எனவும், தென்னம்பாளையம் நால் ரோட்டில் போலீசார் மூலம் சிக்னல் விளக்கை கையாண்டு வாகனப்போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?.



Next Story