பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. போலீசார் உடனடியாக போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர்.
இந்த சாலை 20 அடி சாலையாக தற்போது உள்ளது. திருமண மண்டபங்கள் அதிகளவில் உள்ளது. ஆனால் வாகனங்களை பார்க்கிங் செய்யும் வசதி இல்லை. இதனால் சாலையில் நிறுத்தி விட்டுச் செல்வதால் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில்
இந்த நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாவடி வரை சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு மழை நீர் கால்வாய் கட்டும் பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. கால்வாய் கட்டுவதற்காக கால்வாயில் உள்ள மண்ணை எடுத்து சாலையில் கொட்டுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் குடியாத்தம் சாலை ஸ்தம்பித்து வருகின்றன.
பள்ளி மாணவ- மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் காலை, மாலை வேலைகளில் கால்வாய் கட்டும் பணியினை தவிர்த்து, இரவு நேரங்களில் பணியினை மேற்கொள்ளவும், குடியாத்தத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை தடை செய்யவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.