திருவாரூர் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்


திருவாரூர் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 July 2023 10:15 AM IST (Updated: 28 July 2023 10:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழித்தேர் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திருவாரூர் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


ஆழித்தேர் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திருவாரூர் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 வீதிகள்

திருவாரூர் நகரில் உள்ள 4 வீதிகளிலும் குடியிருப்புகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த வீதிகளில் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களும் கீழவீதியில் தான் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்கள் தேரோட்ட காலத்தில் மட்டும் 4 வீதிகளில் சுற்றிவிட்டு மீண்டும் கீழ வீதியில் உள்ள நிலையில் நிறுத்தப்படும்.

கனரக வாகனங்கள்

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கீழவீதி வழியாக தான் கனரக வாகனங்கள், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவாரூரில் இருந்தும், திருவாரூர் வழியாகவும் மயிலாடுதுறை, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, நன்னிலம், காரைக்கால், நாகூர் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் திருவாரூர் கீழவீதி வழியாக தான் சென்று வருகின்றன. இந்த வழியாக செல்பவர்கள் தினமும் போக்குவரத்து பிரச்சினையை கட்டாயம் சந்திக்க வேண்டிய நிலை தான் உள்ளது.அதிலும் குறிப்பாக ஆழித்தேர் மிகப் பெரிய தேர் என்பதால் அனைத்து வாகனங்களும் அதனை ஒட்டியே சென்று வருகின்றன.

ஆழித்தேர்

இந்த ஆழித்தேருக்கு அருகில் 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையில் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கியும் வருகின்றன. ஆழித்தேர் மீது வாகனங்கள் மோதி சேதமடையவும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் அதன்மார்க்கமாக செல்ல கூடிய பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆழித்தேர் நிறுத்தப்பட்டுள்ள கீழவீதி வழியாக தான் சென்று வருகின்றன. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி கொண்டு இந்த வழியாக செல்கிறது.

பயன்பாடின்றி உள்ள பஸ் நிறுத்தங்கள்

பழைய பஸ் நிலையத்தில் இருந்து வந்து கீழவீதி வழியாக செல்லும் போது பஸ் பயணிகளுக்கு என எந்த பஸ் நிறுத்தமும் இல்லை. ஆனால் தெற்கு வீதியில் 2 இடங்களில் பஸ் நிறுத்தம் உள்ளது.

அதேபோல மேல வீதியில் ஒரு இடத்திலும், வடக்கு வீதியில் ஓர் இடத்திலும் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பஸ்கள் இந்த வழியே வராமல் கீழவீதி வழியாக செல்வதால் இந்த நான்கு பஸ் நிறுத்தங்களும் பயன்பாடின்றி உள்ளன.

மேலும் கீழ வீதி வழியாக செல்லும் போது பஸ் நிறுத்தங்கள் இல்லாததால் மழைகளில் நனைந்தும், வெயிலில் அவதிப்பட்டும் பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

அதே போல் நகராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், தொடக்கப்பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், ஆஸ்பத்திாிகள் என அனைத்தும் தெற்கு வீதியில் தான் உள்ளன. கீழவீதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பள்ளிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் சென்று வருகின்றனர்.

கீழ வீதியில் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேரும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.

தடை விதிக்க வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லாரி மோதியதால் ஆழித்தேர் மூடுவதற்கு பயன்பட்ட இரும்பாலான கூண்டுகள் சேதம் அடைந்தன. இதை தொடர்ந்து ஆழித்தேரின் மீது மோதாமல் இருக்க தேரை மூடி உள்ள இரும்பு கூண்டுகள் மீது எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க தடைவிதிக்க வேண்டும். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கனரக வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story