அரசாங்கமே மது விற்பனை செய்தாலும் போதையில் வாகன ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் - போக்குவரத்து கமிஷனர் பரபரப்பு பேட்டி


அரசாங்கமே மது விற்பனை செய்தாலும் போதையில் வாகன ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் - போக்குவரத்து கமிஷனர் பரபரப்பு பேட்டி
x

‘டாஸ்மாக்’ கடை அருகிலும் போலீசார் நின்று குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்கத்தான் செய்வார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி ஷரத்கர் கூறினார்.

சென்னை:

சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி ஷரத்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய அபாரத தொகை

கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத் திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. இந்த அபராத தொகையை வசூலிக்கும்படி போக்குவரத்துத்துறை செயலாளர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை வருகிற 28-ந்தேதிக்கு மேல் வசூலிக்கப்படும். மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.

புதிய அபாரத தொகையை வசூலிக்கும் போது பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் கவனமாக கையாளும்படி போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சினை இருக்கத்தான் செய்யும். காலப்போக்கில் பிரச்சினை சரியாகிவிடும்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அரசாங்கமே மதுவை விற்பனை செய்தாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டலாம் என்று அரசாங்கம் சொல்லவில்லை. சட்டத்திலும் அதற்கு அனுமதி இல்லை. எனவே குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதையில் இருப்பவர்கள் ஆட்டோ அல்லது வாடகை காரில் செல்லலாம்.

'டாஸ்மாக்' கடை அருகிலும் போலீசார் நின்று குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்கத்தான் செய்வார்கள். அதில் தவறு இல்லை. குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகை கோர்ட்டு மூலம் வசூலிக்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் அபராத தொகையை ஏழைகள் கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க முடியாது. சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதம் என்பதை தெரிந்துக் கொண்டு தான் சிலர் போதையில் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.

6 மாதங்களில் ரூ.23 கோடி அபராதம்

போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களோடு தெரிந்தே பயணிப்பவர்களும் தற்போது ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ மற்றும் வாடகை போன்றவற்றில் பயணிப்பவர்களுக்கு டிரைவர் குடிபோதையில் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாது. எனவே அவர்களுக்கு இந்த அபராத தொகை வசூலிக்கப்பட மாட்டாது.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மட்டும் தான் அதற்கான கருவி மூலம் சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தற்போது உள்ள எந்திர நடைமுறையில் கண்டுபிடிக்க முடியாது. அதிலும் ஆபத்து உள்ளது.

போதை மாத்திரை, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க குறிப்பிட்ட எந்திரத்தில் வழிவகை செய்ய முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படும். இது போன்ற எந்திரங்களை தயாரிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இது பற்றி பேசப்படும். கால் சென்டர்கள் மூலம் அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அபராத தொகை கடந்த 6 மாதங்களில் ரூ.23 கோடி வசூலாகி உள்ளது.

உயிரிழப்பு 12.5 சதவீதம் குறைவு

கால் சென்டர்கள் வருவதற்கு முன்பு ரூ.7 கோடி அளவுக்கு தான் அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. தற்போது வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு கூட கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.5 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் வாகன நெரிசல் உள்ள பகுதியாக 25 இடங்களை தேர்வு செய்துள்ளோம். அந்த இடங்களில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 4 போலீசாரை நியமிக்க உள்ளோம். அவர்கள் வாகன நெரிசலை சீர் செய்யும் முயற்சியில் இறங்குவார்கள். இதற்காக ஆயுதப்படை பிரிவில் இருந்து 100 போலீசார் வரவழைக்கப்படுவார்கள்.

இனிமேல் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்கு போடுவார்கள். அவர்களுக்கு உரிய கருவிகள் வழங்கப்படும். இதற்காக 36 புதிய கருவிகள் வாங்கப்பட உள்ளது.

170 'இ-சலான்' கருவிகளும் வழங்கப்பட உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் பெண் போலீசாரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் பணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story