நெல்லையில் போக்குவரத்து விதிமீறல்; வாகன ஓட்டிகளுக்கு ரூ.5¼ கோடி அபராதம்


நெல்லையில் போக்குவரத்து விதிமீறல்; வாகன ஓட்டிகளுக்கு ரூ.5¼ கோடி அபராதம்
x

நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.5¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை விட்டு மாற்று வழித்தடத்தில் செல்கின்றது என்றும், அதிவேகமாக செல்கிறது என்றும், ஏர்ஹாரன் அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், மேலும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வதாகவும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் காமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக ஏர்ஹாரன் அடித்துக்கொண்டு வந்த தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் காமேஸ்வரன் கூறுகையில், நெல்லை மாநகர பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 57,146 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.5 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 225 அபராதம் விதிக்கப்பட்டது. அதிவேகமாக வாகனம் ஓட்டிய 1,670 பேரின் ஓட்டுனர் உரிமம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 3 மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பஸ்களில் ஆடம்பரமான விளக்கு பொருத்துதல் மற்றும் அதிவேகமாக செல்லுகின்ற வாகனங்களுக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்றார்.


Next Story