லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
வாணியம்பாடி அருகே காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பழுதாகி நின்ற லாரி
சென்னையில் இருந்து காற்றலை இறக்கை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு ஒரு லாரி சென்றது. நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி பழுதாகி நின்றது.
உடனே லாரி டிரைவர் மற்றும் காற்றலை இறக்கை பாதுகாப்பிற்காக வந்த ஊழியர்கள் லாரியில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி ரோட்டின்குறுக்கே நின்றதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் சென்று மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் அந்த வழியாக எதிரே வந்த வாகனங்கள் விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரியில் இருந்து வேலூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் ராணுவ வீரர் மேகநாதன் என்பவர் வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் மீது, வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக தார் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதனால் அந்தப் பகுதியில் மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி டவுன் போலீசார் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த சம்பவங்களால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.