உத்தமபாளையத்தில் காரில் மனித உடல் உறுப்புகள் கடத்தல்; நரபலி கொடுக்கப்பட்டதா?-பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை


உத்தமபாளையத்தில் காரில் மனித உடல் உறுப்புகள் கடத்தல்; நரபலி கொடுக்கப்பட்டதா?-பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2023 2:30 AM IST (Updated: 5 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் காரில் மனித உடல் உறுப்புகள் கடத்திவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவை நரபலி கொடுக்கப்பட்டவரின் உறுப்புகளா? என்பது குறித்து 3 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி

உத்தமபாளையத்தில் காரில் மனித உடல் உறுப்புகள் கடத்திவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவை நரபலி கொடுக்கப்பட்டவரின் உறுப்புகளா? என்பது குறித்து 3 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரில் உடல் உறுப்புகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தமபாளையத்தில், பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனை பார்த்த போலீசார் அந்த காரின் அருகில் சென்றனர். காருக்குள் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனை செய்தனர். அதனுள் 3 சூட்கேஸ் இருந்தன.

அதில் ஒரு சூட்கேஸ் பெட்டியில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இருந்தன. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே காரில் வந்த நபர்களை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் வந்த கார், அதனுள் வைத்திருந்த 2 சூட்கேஸ் பெட்டிகள், உடல் உறுப்புகள் அடங்கிய பெட்டியையும் அங்கு எடுத்துச்சென்றனர்.

மாந்திரீக பூஜை

போலீஸ் நிலையத்தில் வைத்து மற்ற 2 சூட்கேஸ் பெட்டிகளையும் போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் துணிமணிகளும், மற்றொரு பெட்டியில் எலுமிச்சை, கற்பூரம், முட்டை உள்ளிட்டவையும் இருந்தன. அதன்பிறகு காரில் வந்த நபர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பிடிபட்ட நபர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது 39), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்சிங் (40), கமுதியை அடுத்த பசும்பொன்னை சேர்ந்த முருகன் (65).

இவர்களுக்கும், உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த ஜேம்ஸ் (52) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், அலெக்ஸ்பாண்டி உள்ளிட்ட 3 பேரிடமும் நள்ளிரவில் மாந்திரீக பூஜை செய்தால் பணம் பல மடங்காக கொட்டும், ஒரேநாளில் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய 3 பேரும் பூஜைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஜேம்ஸ், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள வண்டிப்பெரியாரில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளார். அவரிடம் நேரில் சென்று ரூ.5 லட்சத்தை கொடுக்க வேண்டும். அப்போது அந்த நபர், சூட்கேஸ் பெட்டி ஒன்றை தருவார். அதனை திறந்து பார்க்காமல் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். பின்னர் பூஜை செய்து பணத்தை பலமடங்காக மாற்றிவிடலாம் என்று கூறினார்.

ரூ.5 லட்சம்

இதையடுத்து ஜேம்ஸ் கூறியபடி, அலெக்ஸ்பாண்டி, பிரதாப்சிங், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் வண்டிப்பெரியார் சென்றனர். அங்கு சென்றதும், ஜேம்ஸ் கூறிய நபரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்தனர். பதிலுக்கு அவர் ஒரு சூட்கேஸ் பெட்டியை கொடுத்தார். அதேபோல் மற்றொரு சூட்கேஸ் பெட்டியில் எலுமிச்சை, கற்பூரம், முட்டை உள்ளிட்ட பொருட்களை வைத்து கொடுத்தார்.

அதன்பிறகு அங்கிருந்து 3 பேரும் காரில் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 3 பேரும் உத்தமபாளையத்துக்கு காரில் வந்தனர். அப்போது ஜேம்சை செல்போன் மூலம் அழைத்தனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் போலீசாரிடம் சிக்கியதாகவும், உடல் உறுப்புகள் இருந்த பெட்டியில் போலீசார் சோதனை செய்யும் வரையில் அதில் என்ன இருந்தது என்பது தங்களுக்கு தெரியாது என்றும் பிடிபட்ட 3 பேரும் தெரிவித்தனர்.

மோசடி வழக்கு

இதுதொடர்பாக அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஜேம்ஸ் குறித்தும் போலீசார் விசாரித்தனர். அதில், ஜேம்ஸ் மீது ஏற்கனவே மாந்திரீகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இவர், விசேஷ நாட்களான அமாவாசை, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களை குறிவைத்து, அன்றைய தினம் மாந்திரீக பூஜை செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக ஏராளமானோரை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

அந்த வகையில் அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரையும் ஜேம்ஸ் ஏமாற்றி மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பிடிபட்ட 3 பேரில், ஒருவர் ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், மற்றொருவர் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும் இருவேறு தகவலை தெரிவித்தனர். இதனால் அவர்கள் எவ்வளவு பணத்தை இழந்தனர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

மனித உடல் உறுப்புகளா?

குறிப்பாக நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் எப்படி வந்தது? என்பதிலும் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவை மனித உடல் உறுப்புகளா? அல்லது விலங்குகளின் உடல் உறுப்புகளா? என்பது தெரியவில்லை. இதனால் அவற்றை மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதன் அறிக்கை வந்தபிறகே இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர். மனித உடல் உறுப்புகளாக இருந்தால், நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

அதேபோல் மந்திரவாதி ஜேம்ஸ் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் பிடிபட்டால் ஏமாற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பது தெரியவரும். இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உத்தமபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story