கனரக வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி
தளி-ஆனைமலை சாலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, ஆனைமலை, பழனி, திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் மைய இடமாக தளி பேரூராட்சி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் சென்று வரலாம். இதன் காரணமாக வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் தளியின் நுழைவுப் பகுதியில் இருந்து ஊர் எல்லை வரையில் உள்ள ஆனைமலை செல்லும் பிரதான சாலை குறுகளாக உள்ளது. இதனால் எதிர் எதிராக வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகள் உள்ளதா?
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியவாறு உள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தளியே மையப்பகுதியாகும். இங்கு வந்து மற்ற பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து சென்று வருகிறது. ஆனால் தளியின் நுழைவு பகுதியில் இருந்து ஆனைமலை செல்லும் பிரதான சாலை குறுகலாக உள்ளது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பெருகி வருகின்ற வாகன பெருக்கத்திற்கு ஏற்றவாறு சாலையை அகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சாலையை அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும்.
நிரந்தர தீர்வு
அத்துடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டியதும் அதிகாரிகள் கடமையாகும். எனவே தளிப்பகுதியில் ஆனைமலை செல்லும் பிரதான சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அத்துடன் இந்த சாலையில் அளவீடு பணியை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதனால் சாலையும் அகலமாகும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.