சேலத்தில் கடன் தொல்லையால் விபரீதம்: லேத் பட்டறை உரிமையாளர் விஷம் குடித்து பரிதாப சாவு- அதிர்ச்சியில் ஆஸ்பத்திரியிலேயே மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
சேலத்தில் கடன் தொல்லையால் லேத் பட்டறை உரிமையாளர் விஷம் குடித்து இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ஆஸ்பத்திரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லேத் பட்டறை உரிமையாளர்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவர், 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்திருந்தார். இவருடைய மகன் பாபு. இவர்கள் இருவரும் லேத் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.தொழிலுக்காக ரெட்டியூரை சேர்ந்த ராஜா என்பவரிடம் தங்கராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடந்த 2 மாதமாக வட்டி தொகையை கொடுக்கவில்லையாம். இதனால் பணம் கொடுத்த ராஜா, தங்கராஜின் லேத் பட்டறைக்கு வந்து மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
விஷம் குடிப்பு
இதனால் மனவேதனை அடைந்த தங்கராஜ் சூரமங்கலம் புதுரோடு பூனைக்கரடு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து விஷத்தை குடித்தார். பின்னர் அவர், இரும்பாலை ஓம்சக்தி நகரில் உள்ள வீட்டிற்கு சென்று தான் விஷம் குடித்துவிட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிதாப சாவு
நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். தங்கராஜ் அருகிலேயே அமர்ந்து அவரை கவனித்து வந்த மனைவி விஜயா (58). கணவர் இறந்தவுடன் அவரது உடல் மீது கிடந்து அழுது புரண்டார். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே தங்கராஜின் உடலை தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஒரு அறையில் வைத்து விடிந்தவுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.
ஆஸ்பத்திரியில் தற்கொலை
நேற்று அதிகாலை 5 மணி அளவில் விஜயாவை திடீரென காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தேடினர். அப்போது ஒரு அறையில் விஜயா தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. அதாவது, கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்துபோன தங்கராஜ் மற்றும் அவருடைய மனைவி விஜயா ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தங்கராஜ் வட்டிக்கு பணம் வாங்கி இருந்த ரெட்டியூரை சேர்ந்த ராஜாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த தங்கராஜூக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி ஆஸ்பத்திரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.