மதுரையில் விபரீதம்:கிரேன் மூலம் தூக்கிய மின்கம்பம் நழுவி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்- மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு


மதுரையில் கிரேன் மூலம் தூக்கிய மின்கம்பம் நழுவி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை


மதுரையில் கிரேன் மூலம் தூக்கிய மின்கம்பம் நழுவி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்

மதுரை கோச்சடை முத்துராமலிங்கதேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம். இவருடைய மகன் பரிதி விக்னேசுவரன் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேசுவரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கோச்சடையில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோச்சடை முத்தையா கோவில் அருகே பழுதான மின்கம்பத்தை மின்வாரியத்தினர் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பணியில் 4 பேர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மின்கம்பம் விழுந்தது

அப்பொழுது கிரேன் மூலம் மின்கம்பத்தை தூக்கியபோது, அது நழுவி விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பரிதி விக்னேசுவரன் மீது மின்கம்பம் விழுந்தது. அதில் மாணவனின் இடது காலில் கணுக்கால் சிதைந்தது. அலறி துடித்த மாணவரை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மின்கம்பம் மாற்றும் பணியின் போது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாமல் மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்ட பணியால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் தேசிய ஜூடோ போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த மாணவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கவலையுடன் தெரிவித்தனர்.

மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்கு

இதுகுறித்து மாணவரின் தாய் கூறும் போது, "மின்வாரியத்தினர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததே எனது மகனின் பலத்த காயம் அடைய காரணமாகும். அவனுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இந்த சம்பவத்தில், அலட்சியமாக பணிகள் மேற்கொண்டதாக கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் மீது எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story