பயிற்சி பெண் டாக்டர் காய்ச்சலுக்கு பலி


பயிற்சி பெண் டாக்டர் காய்ச்சலுக்கு பலி
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பயிற்சி பெண் டாக்டர் காய்ச்சலுக்கு பலியானார்.

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பயிற்சி பெண் டாக்டர் காய்ச்சலுக்கு பலியானார்.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 17 பேர் உள்நோயாளியாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 4 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணி புரிந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி டாக்டர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பசும்பரா பகுதியை சேர்ந்தவர் சிந்து(வயது 22). இவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்து முடித்து விட்டு அங்கேயே பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சலுக்கு பலி

அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்று வந்துள்ளது. ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் சிந்துவின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சல் இருக்கிறதா? என அறிய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரத்த மாதிரி முடிவு வருவதற்கு முன்பே நேற்று காலை சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சக டாக்டர்கள் கதறல்

சிந்துவின் உடலுக்கு சக டாக்டர்கள் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர். சிந்துவின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த மாநிலமான கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரி மற்றும் பயிற்சி டாக்டர், மாணவ-மாணவிகளின் விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெளிப்பான் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story