10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி
உடுமலை ஒன்றியத்தில் உள்ள 18 குறுவள மையங்களில், எமிஸ் இணையதளத்தில் பதிவுகள் செய்வது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.
எமிஸ் இணையதளம்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தல்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், எமிஸ் (கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்) இணையதளத்தில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்களின்படி மாணவர்கள் சேர்க்கையை எவ்வாறு பதிவு செய்வது, பள்ளி மாற்றுச்சான்றிதழை (டி.சி.) எவ்வாறு தயாரிப்பது மற்றும் பதிவேடுகள் அனைத்தையும் மின்மயமாக்குவது ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு உடுமலை ஒன்றியத்தில் ஆங்காங்கு குறுவள மையங்களில் நேற்று நடந்தது. அப்போது தகவல் தொழில் நுட்பத்தில் எமிஸ் இணையதளம் மூலம் பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் திரட்டுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பது மற்றும் மாணவர்களுக்கு பெற்றுத்தரவேண்டிய அரசின் நலத்திட்டங்களை எளிதில் கணக்கீடு செய்து பெற்றுத்தருவது ஆகியவற்றிற்கு ஏதுவாக எமிஸ் இணையதளம் உள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இந்த மின் பதிவேடுகளை பராமரிப்பதன் மூலமாக நேரம் மிச்சம் ஆவதுடன், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிவது, அவர்களது உடல்நலம் சார்ந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்வது குறித்தும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.
18 குறு வள மையங்கள்
இந்த பயிற்சி வகுப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்படி, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் வளமைய ஒருங்கிணைப்பாளர்களால் ஒருங்கிணைத்து, ஆன்லைன் மூலம் மாநில கருத்தாளர்கள், மருத்துவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மூலம் உடுமலை ஒன்றியத்தில் உள்ள குறு வள மையங்கள் அளவிலான, 18 பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கணினி ஆய்வகங்களில் நேற்று நடந்தது.
இதில் உடுமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 629 ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.