தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவகங்கை,
காளையார்கோவிலில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1505 பேருக்கு தொடக்கநிலை மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை நீக்கும் வகையிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி தலைமை தாங்கினார்.
இந்த பயிற்சியை தொடங்கி வைத்து அவர் பேசும் போது,
வரும் கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற அடிப்படை பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த பாடத்தை நடத்துவதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் மாவட்ட கருத்தாளர்கள் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பயிற்சி அளிப்பார்கள் என்றார். முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சூசை ஆரோக்கியமலர் நன்றி கூறினார்.