நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ள பேரிடர் செயல்விளக்க நிகழ்ச்சி-சமயசங்கிலியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்


நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ள பேரிடர் செயல்விளக்க நிகழ்ச்சி-சமயசங்கிலியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் வெள்ள பேரிடர் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்

நாமக்கல்:

செயல் விளக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் தாங்களாகவே தங்களையும், தங்கள் உறவினர்கள், தங்கள் பகுதியில் உள்ளவர்களை மீட்பது குறித்த செயல்விளக்கம் நேற்று பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர், மோகனூர், திருச்செங்கோடு ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.

குமாரபாளையம் தாலுகா சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்,

வாழை மரங்கள்

இந்த செயல்விளக்க நிகழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் நபரை மீட்டு, தகுந்த முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தல், வீட்டில் அல்லது அருகில் கிடைக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை ஒருங்கிணைத்து அவற்றை கொண்டு வெள்ள நீரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்தடைவது.

தண்ணீர் பிடிக்க பயன்படுத்தும் 20 லிட்டர் பெரிய கேன்களை கொண்டு பாதுகாப்பான இடத்தை அடைவது, அருகில் எளிதாக கிடைக்கும் வாழை மரங்களை ஒருங்கிணைத்து அவற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக கரைக்கு வருவது, வெள்ளபாதுகாப்பு கவச உடை அணிந்தும், டியூப் ஆகியவற்றை பயன்படுத்தியும் பொதுமக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட வெள்ள பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு விளக்கம்

மேலும் தீ விபத்து, திடீர் விபத்துகள் நேரிடும் போது பதற்றம் இல்லாமல் குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை அலுவலர்களால் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் (பொறுப்பு) ரமேஷ், குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி உள்பட தீயணைப்புத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றில் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை மீட்டு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story