பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு மண்பரிசோதனை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வரவேற்று, மண்வளத்தை பாதுகாப்பதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளால் மண்வளம் அதிகரிப்பதன் பயனையும், அவற்றை பராமரிக்காததால் பயிர்களில் தோன்றும் பூச்சிகளை பற்றியும் மண்ணியல் துறை இணை பேராசிரியர் சிவக்குமார், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன், பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியம், பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் தெய்வமணி ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மண் வளத்திற்கு இயற்கை உரங்களின் பங்களிப்பை எடுத்து கூறினார். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை துறை உதவி பேராசிரியர் தங்கதுரை நன்றி கூறினார்.