350 தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
வேலூரில் 350 தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி முகாம் 10 நாட்கள் நடக்கிறது.
தேசிய மாணவர் படை சென்னை ஏ பிரிவு மற்றும் காட்பாடி 10-வது பட்டாலியன் தேசிய மாணவர் படையினருக்கு 10 நாட்கள் பயிற்சி முகாம் வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. பயிற்சி முகாமை லெப்டினென்ட் கர்னல் சஞ்சய் சர்மா தொடங்கி வைத்தார். இதில், சென்னை, காட்பாடி தேசிய மாணவர் படையை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 350 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், தடை, உயரம், நீளம் தாண்டுதல், சுவர் ஏறுதல், சண்டைக்கு தயாராதல், சுத்தம் மற்றும் சுய சுகாதாரம், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் காட்பாடி 10-வது பட்டாலியன் ராணுவ வீரர்களால் அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்படும் 60 மாணவ-மாணவிகள் புதுடெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய மாணவர் படையினருக்கு தங்கும் வசதி, கழிப்பறை, குழியலறை உள்ளிட்ட வசதிகளை ஊரீசு பள்ளி முதல்வர் எபினேசர் செய்திருந்தார்.