ஸ்ரீரங்கத்தில் கோ-கோ விளையாட்டு வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு
ஸ்ரீரங்கத்தில் கோ-கோ விளையாட்டு வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம், ஜூன்.5-
கோ-கோ விளையாட்டில் தமிழக அணி சார்பில் விளையாட 17 வயதிற்குட்பட்ட அனைத்து மாவட்ட விளையாட்டு வீராங்கனைகள் சென்னையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அகில இந்திய ஹலோ இந்தியா தமிழ்நாடு பெண்கள் கோ-கோ அணிக்கு திருச்சி மாவட்ட கோகோ கழகம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 10 நாட்களாக திருச்சி மாவட்ட கோ-கோ கழக செயலாளர் கருப்பையா தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கோ-கோ கழக திருச்சி மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். எஸ்.டி.ஏ.டி ஓய்வுபெற்ற முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி, கல்லூரி துணை முதல்வர் பார்த்தசாரதி, தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் கழக நிர்வாக உறுப்பினர் அப்பாவு பாண்டியன், தமிழ்நாடு மாநில கோ -கோ சங்க பொதுச்செயலாளர் நெல்சன் சாம்வேல், தமிழ்நாடு சிலம்பம் கழக விக்டர்குழந்தைராஜ், உடற்கல்வி இயக்குனர் சுவாமிநாதன் ஆகியோர் வீராங்கனைகளை வாழ்த்தி வழி அனுப்பினர். முடிவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மோகன் நன்றி கூறினார். பயிற்சி பெற்ற வீராங்கனைகள் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அரியானாவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டியில் பங்கேற்க நேற்று புறப்பட்டு சென்றனர்.