நீர்வள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது குறித்து நீர்வள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது குறித்து நீர்வள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
பயிற்சி வகுப்பு
தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை நீர் வளம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார்.
இந்த பயிற்சியில் 250 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தாமிரபரணி நதியினை தூய்மையாக பாதுகாப்பது, நீர் வளம் பாதுகாத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பொருநை நதி கையேடு
பயிற்சியில் கலெக்டர் விஷ்ணு பொருநை நதி குறித்த கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது:-
தாமிரபரணி நதி நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்கிறது. நமக்கு வரப்பிரசாதமாக உள்ள தாமிரபரணி தண்ணீரை குளிக்கும் தரத்தில் இருந்து குடிக்கும் தரத்திற்கு கொண்டுவருவது உங்கள் கடமையாகும்.
அனைத்து தரப்பு மக்களிடமும் நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி நதியினை தூய்மைபடுத்த முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். தண்ணீரின் அருமையை அறிந்து பொருநை எனது பெருமை என்ற நோக்கத்தோடு தன்னார்வலர்கள் தங்கள் பணியை விரிவுபடுத்தி சிறப்பாக பணிசெய்து பழமை மாறாமல் தாமிரபரணியை மீட்டு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சவுந்தரமகாதேவன், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி நுண் உயிரியல் துறைதலைவர் விஸ்வநாதன் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு நீரின் தர கண்காணிப்பு என்ற தலைப்பில் பயிற்சிகளை வழங்கினார்கள்.
சமூக நீதி நாள் உறுதி மொழி
இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி கலெக்டர் விஷ்ணு தலைமையில் எடுக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், மேலாளர் வெங்கடாசலம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.