நன்னடத்தை விதிகள் குறித்து பயிற்சி வகுப்பு
ராணிப்பேட்டையில் நன்னடத்தை விதிகள் குறித்து பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அலுவலகங்களில் நன்னடத்தை விதிகள் பின்பற்றுவது குறித்து ஒருநாள் பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு நிர்வாகத்தையும் சிறந்த முறையில் நடத்த அலுவலக நடைமுறைகள் மற்றும் நன்னடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்படுத்தினால் அலுவலகம் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையில் இயங்கும். ஆகவே அதனை நிர்வகிக்கும் அலுவலருக்கு அனைத்து விதிகளும் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள பதிவறையில் அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெறும் ஆணைகள், அலுவலகத்தில் பின்பற்றப்படும் கடித போக்குவரத்துகள் அனைத்தும் முறையாக பாதுகாக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் துறைச் சார்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சிசுந்தரம், மனிதவள மேலாண்மை மாவட்ட வருவாய் அலுவலர் முருகன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.