விவசாயிகளுக்கு பயிற்சி
கீழக்கலங்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் தொடர்பான விவசாயிகள் பயிற்சி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கீழக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ஆலங்குளம் சிவகுருநாதன் அறிவுரைப்படி பயிற்சி நடத்தப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் சுமன் வரவேற்றார்.
துணை வேளாண்மை அலுவலர் முருகன், வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து பேசினார். பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் வாழ்த்தி பேசினார். பயிற்சியாளர் மற்றும் முன்னோடி விவசாயியான ஆறுமுகம், மானாவாரி வேளாண்மையில் கோடை உழவு, விதை நேர்த்தி முறைகள், பயிர் ரக தேர்வு குறித்த தொழில்நுட்பங்களை வழங்கினார். தரமான விதைகள் மற்றும் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் ரமணி, விதை பண்ணை அமைப்பது குறித்து விதைச்சான்று அலுவலர் சந்துரு ஆகியோர் பேசினர். பயிற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த காணொலி காட்சி, பிக்கோ புரோஜக்டர் மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் கீழக்கலங்கல் பகுதி விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை கீழக்கலங்கல் பகுதி உழவர் நண்பர் பொன்மூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.