பாண்டவர்மங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
பாண்டவர்மங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர் மங்கலம் கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை, அட்மா விரிவாக்க திட்டங்கள் சார்பில் முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
முகாமில் ஓய்வுபெற்ற வேளாண்மை அதிகாரிகள் எல்லப்பன், சுப்பாராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தரிசு நிலங்களில் மர சாகுபடி, மானாவாரி பயிர்களின் கோடை உழவு, மண் பரிசோதனை செய்தல், தரமான விதை தேர்வு, விதைநேர்த்தி, களை, உர, பூச்சி நோய் நிர்வாகம், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், சூரிய விளக்கு பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, வரப்பு பயிர் செய்தல், உளுந்து- பாசிப்பயிறு தொழில்நுட்ப சாகுபடி பற்றிய வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் காயத்திரி, உதவி அலுவலர் ரேவதி, மேலாளர் சாலமோன் நவராஜ் பொற் செல்வன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.