கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி 5-ந்தேதி தொடங்குகிறது
கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயிற்சி
தங்கத்தின் தரத்தை அறிந்து கொள்வது தொடர்பாக கடலூர் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்பு, சுயதொழில், தங்க நகை பற்றி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பிறகு கூட்டுறவு வங்கிகள், தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரியலாம். இங்கு அளிக்கப்படும் பயிற்சிக்கான சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியின்போது தங்கத்தை பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகை தரம் பார்த்து கொள்முதல் செய்வது, உரைகல்லில் தரம் அறிவது, தங்கத்தில் இன்றைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கே.டி.எம். மற்றும் ஹால்மார்க் பற்றிய விளக்கம் தொடர்பான பயிற்சியுடன், பயிற்சிக்கான உபகரணங்களும் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சான்றிதழ்
இந்த பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் 2 மாதங்கள்(100 மணி நேரம்) ஆகும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் உபகரணங்களுடன் சேர்ந்து ரூ.4,643 மட்டுமே. பயிற்சி முடித்து தேர்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வருகிற 5-ந்தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையம் கடற்கரை சாலை சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம் கடலூர் என்ற முகவரியிலோ அல்லது 04142-222619, 9344277076 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.