இணையவழியில் மனைப்பிரிவு அனுமதி குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி


இணையவழியில் மனைப்பிரிவு அனுமதி குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி
x

இணையவழியில் மனைப்பிரிவு அனுமதி குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட நகர், ஊரமைப்புத்துறையின் உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் மனைப்பிரிவு அனுமதிக்கு விண்ணப்பிக்க, ஒப்புதல் வழங்க இணையதள வசதியை அறிமுகம் செய்திட சட்டமன்ற கூட்டத்தில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது. இதன்படி மனைப்பிரிவு அனுமதி பெற விரைவில் இணையதள முறை அறிமுகமாக உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் நகர், ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி.) சார்பில் இதுகுறித்து நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த நகர், ஊரமைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமீபத்தில் இணைய வழியாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்தல், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல், அரசுக்கு கட்டணம் செலுத்துதல், விண்ணப்பங்களின் தன்மைக்கு ஏற்ப உரிய ஆணை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி மூலம் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள், விரைவில் வீட்டுமனைக்குரிய அனுமதி அல்லது கட்டிடங்கள் கட்டுவதற்குரிய அனுமதியை எளிதில் பெறலாம். இதனால் காலநேர விரயமும், அலைச்சலும் குறையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story